சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 23) நேரில் சென்று மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாநிலத்தில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் விநியோகம் மற்றும் மின்கட்டமைப்பு தொடர்பான நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், மின்விநியோகத்தில் ஏற்படும் தடைகள், பழுதுகள் மற்றும் அவற்றை விரைந்து சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநில மின் பளு பகிர்வு மையமான State Load Despatch Centre (SLDC)-க்கு சென்ற முதலமைச்சர், மாநிலம் முழுவதும் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் தேவை மற்றும் விநியோகம் நிகழ்நேரத்தில் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னை மின் விநியோகக் கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு மையமான SCADA Control Centre-ன் செயல்பாடுகளையும் அவர் பார்வையிட்டார். மின் விநியோக நிலவரத்தை கண்காணித்தல், மின் சுமையை நிர்வகித்தல், மின் தடைகளை கண்டறிந்து சீரமைக்கும் பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும், பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் பெறும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தீர்வு காணப்படுகின்றன என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
மின்தடை, சீரற்ற மின்னழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்சார விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள், மின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் சேமிப்பு மற்றும் மின் பரிமாற்றம்–விநியோக கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

