விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இடம் மற்றும் பாதை தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை ஒரு தரப்பினர் தடுத்ததாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே உள்ள இடம் தொடர்பாக இரு தரப்பினரும் உரிமை கோரி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று நிலத்தை அளவீடு செய்வதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது நில அளவீடு செய்யக் கூடாது எனக் கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கட்சி கொடிகளுடன் திரண்டு வந்து நில அளவர்களை பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சாத்தூர் வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனினும், பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு ஏற்படாததால் ஒத்தையால் கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

