விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.06 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்தும், பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தில் அச்சத்துடன் கல்வி பயிலும் அவலநிலை நீடிக்கிறது.
வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 850-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், பள்ளி வகுப்பறைகளில் கடும் இடநெருக்கடி நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிச் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பழமையான கட்டடத்திலேயே மாணவர்கள் படிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தினமும் அச்சமடைந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.3 கோடியே 6 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் 13 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்து 6 மாதங்கள் ஆகியும், இதுவரை கட்டடம் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் வீணாகக் கிடக்கிறது.
அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் தயாராக இருந்தபோதிலும், மாணவர்கள் இன்னமும் பாதுகாப்பு அற்ற பழைய கட்டடத்திலேயே தொடர வேண்டியிருப்பது பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அசம்பாவிதம் ஏதேனும் நிகழும் முன், மாணவர்களின் உயிர் பாதுகாப்பையும் எதிர்காலக் கல்வியையும் கருத்தில் கொண்டு, முடங்கிக் கிடக்கும் புதிய பள்ளிக் கட்டடத்தை உடனடியாகத் திறக்கத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

