தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் மற்றும் வீடுகளை குறிவைத்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை சிவகாசி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மாவட்டம் பேரையூர் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (60), அவரது மகன் சுப்புராஜ் (30) மற்றும் இவர்களது உறவினரான சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த தவசீலன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடுகளில் கொள்ளை முயற்சி
சிவகாசி மேற்கு பகுதியான சிவானந்த நகரில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டிலும், கொங்கலாபுரத்தில் ஓய்வுபெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளரின் மகள் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து சந்தேக நபர்களை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 பேரும் சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் தகவல்
போலீஸ் விசாரணையில், முருகேசன் மீது தமிழகம் முழுவதும் 24 கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும், சுப்புராஜ் மீது விருதுநகர், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் 9 வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தவசீலன் மீது விருதுநகர் மாவட்டத்தில் 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த பின்னர், காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், முகமூடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்து 2 அரிவாள்கள், ஒரு பட்டா கத்தி, இரும்பு சுத்தியல், உளி, கையுறைகள், மழைக்கோட்டுகள், முகமூடி குல்லாக்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், வீடுகளில் கொள்ளையடிக்கச் செல்லும்போது நாய்களை கட்டுப்படுத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் உயிர்க்கொல்லி மருந்தும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்தை நாய்களை கொல்ல பயன்படுத்தியதாகவும், போலீசாரிடம் சிக்கினால் அவர்களை மிரட்டுவதற்காகவும் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூல கொள்ளை வழக்கிலும் தொடர்பு
கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கருவூலத்தில் சுமார் ரூ.1.5 கோடி ரொக்கம் மற்றும் 150 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முருகேசன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

