விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சுற்றித்திரிந்ததாக கமுதியைச் சேர்ந்த 39 வயது இளைஞரை நரிக்குடி போலீசார் கைது செய்தனர்.
நரிக்குடி சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபு உத்தரவின்பேரில், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையிலான போலீசார் சாலை இலுப்பைகுளம் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம். அருகே ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் புல்லட் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த இளைஞர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அப்போது வண்டியின் பெட்டிக்குள் நீளமான அரிவாள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் நடுத்தெருவைச் சேர்ந்த சிதம்பரநாதன் மகன் கோவிந்தா மணிமுத்து (39) என்பது தெரியவந்தது.
மேலும், மண்டலமாணிக்கம், கமுதி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம், மணல் திருட்டு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆயுதச் சட்டத்தின் கீழ் கோவிந்தா மணிமுத்துவை நரிக்குடி போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

