விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் தகர செட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் ரசாயன மூலப்பொருட்கள் வெடித்ததில், வீட்டின் உரிமையாளர் 100 சதவீத தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (60). இவரது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு மற்றும் பதுக்கல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து தகர செட்டில் வைத்திருந்த பட்டாசுகள் மற்றும் ரசாயனப் பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் மைக்கேல்ராஜ் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டதில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மைக்கேல்ராஜ் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்தார்.
அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் ரசாயனப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

