அரியலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக வந்த ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் 1-வது வார்டு தேவேந்திர குல வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் பேங்க் செல்வம் என்ற செல்வம். இவருக்கும் உறவினர்களுக்கும் இடையே இடம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த வழக்கின் விசாரணைக்காக செல்வம் இன்று அரியலூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் செல்வத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்காக வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

