உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் 46-வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் இன்று (செப்டம்பர் 16) தொடங்குகிறது. தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில், இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன.
செப்டம்பர் 16 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், ஓபன் பிரிவில் 208 அணிகளும், மகளிர் பிரிவில் 192 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவுகளிலும் 11 சுற்றுகள் நடைபெற உள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றிருந்தன. இந்த நிலையில், நடப்பு போட்டியிலும் இந்திய அணிகள் தங்களது பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் களம் இறங்குகின்றன.
இந்திய ஆடவர் அணியில் உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மகளிர் அணியிலும் அனுபவம் வாய்ந்த முன்னணி வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
சமர்கந்தில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ஒரே களத்தில் பங்கேற்கும் முக்கியமான சர்வதேச அணிப் போட்டியாக அமைந்துள்ளது.

