திருநெல்வேலி மாவட்டம் செங்காணியில் உள்ள ஸ்ரீகோத பரமேஸ்வரர் – ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ள ராகு ஸ்தலத்தில், புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு சிவ பக்தர்கள் நமச்சிவாய நாமம் பாடியபடி குன்னத்தூர் அருள்ஜோதி மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள குன்னத்தூர் அருள்ஜோதி மலைப் பொத்தையில் சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாற்று தகவல்கள் கூறப்படுகின்றன. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய சிவாலயங்களில் செங்காணி ஸ்ரீகோத பரமேஸ்வரர் திருக்கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவிலில் நடைபெற்று வரும் 65-வது மாத பௌர்ணமி கிரிவல நிகழ்ச்சி, சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோத பரமேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து, நமச்சிவாய நாமம் பாடியபடி கிரிவலத்தை தொடங்கினர்.
7 கிலோமீட்டர் கிரிவலம்
குன்னத்தூர் அருள்ஜோதி மலையை சுற்றி நடைபெற்ற கிரிவலப் பாதையில் கீழத்திருவேங்கடநாதபுரம், வரதராஜ பெருமாள் கோவில், மேலத்திருவேங்கடநாதபுரம், வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பக்தர்கள் சென்றனர்.
தொடர்ந்து குன்னத்தூர் விளாகம் விலக்கு வழியாக சுமார் 7 கிலோமீட்டர் நடந்து சென்று செங்காணி ஸ்ரீகோத பரமேஸ்வரர் கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்தனர்.
இதில் சிவ பக்தர்கள், பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

