நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழாவின் 5-ம் நாள் திருவிழாவையொட்டி கருடசேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவ திருக்கோயில்களில் கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலும் ஒன்றாகும். 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடக்கலை சிறப்புகளுடன் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
5-ம் நாள் கருடசேவை
இந்த ஆண்டுக்கான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவின் 5-ம் நாள் நிகழ்வாக கருடசேவை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீ வெங்கடாசலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு சுவாமி கருடாழ்வார் வாகனத்தில் எழுந்தருளினார்.
வண்ண மலர் மாலைகள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடாசலபதி, கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தபடி வீதியுலா வந்தார்.
கோலாட்டம் ஆடி வழிபட்ட பெண்கள், குழந்தைகள்
கருடசேவையை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். “கோவிந்தா” கோஷங்களை எழுப்பியபடி பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கோலாட்டம் ஆடியும் நடனமாடியும் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர். இதனால் கிருஷ்ணாபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டது.
புரட்டாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் நிகழ்ச்சி வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகின்றன.

