விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் 1436 - ம் பசலி ஆடித் தபசு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, திருமேனி நாத சுவாமி மற்றும் துணைமாலை அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் துணைமாலை அம்மன் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர் மற்றும் ஒன்பது வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடித் தபசு திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் திருமேனி நாத சுவாமி, துணைமாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஆடித்தபசு விழாவையொட்டி 10 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில் திருமேனிநாதர் சுவாமி மற்றும் துணைமாலை அம்மன் ஆகியோர் குதிரை வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், மற்றும் சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் காலை மற்றும் இரவில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து வரும் ஜுலை 29ம் தேதி மாலையில் ஸ்ரீ திருமேனி நாதர் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு, திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் எழுந்தருளி உள்ள துணைமாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மனைத் தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
The News Outlook
🕒 20 ஜூலை, 2026, 11:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

