விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி பகுதிகளில் மேய்ச்சலுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏராளமான வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வாத்து வளர்ப்பவர்கள் அவற்றை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, நெல் அறுவடை முடிந்த வயல்களில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
அந்த வகையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த வாத்து மேய்ப்பவர்கள் தற்போது தங்களது வாத்துக்களை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளனர்.
கூமாபட்டி, வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாய பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள் மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ளன. வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக வாத்துக்கள் செல்வது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நெல் அறுவடை முடிந்த வயல்களில் கிடைக்கும் தானியங்கள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாகக் கொண்டு வாத்துக்கள் மேய்வதால், வாத்து வளர்ப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது.

