நெல்லை டவுன் வாகையடி முனையில் திராவிடர் கழகம் சார்பில் ‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார்’ 80-வது ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சுயமரியாதை சுடரொலிகள் புகைப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் உரையாற்றிப் பேசுகையில் திராவிடர் கழகத்தின் கொள்கையை எந்த கொம்பனாலும் மாற்றி அமைக்க முடியாது. இந்த மாநாடு எந்த தனிநபருக்கும் எதிரானது அல்ல, மக்களுக்கு எதிரானவர்களை காட்டிக் கொடுப்பதற்காக நடத்தப்படுவதாகும். எப்போதும் தங்களை எதிர்க்க வேண்டும் என ஒரு சிறு கூட்டம் உள்ளது. வழியில் வரும் நெருஞ்சி முள்களை தள்ளிவிட்டு நெடுந்தூரம் பயணிக்கும் இயக்கமாக திராவிடர் கழகம் உள்ளது. பெரியார் இல்லாவிட்டால் நாம் இத்தனை பெரிய இடத்திற்கு வந்திருக்க முடியாது. ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால் எத்தனை தொல்லைகள் வந்தாலும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க உழைக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூக நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஜபெரியாரின் கருத்துகள் இன்று உலகமயமாகி வருகின்றன. பல நாடுகளில் சாதி மற்றும் தீண்டாமை இருப்பதால் பெரியாரின் தேவை குறித்து உலக நாடுகள் பேசி வருகின்றன. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தற்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் போன்ற தலைவர்கள் கொள்கை அடிப்படையில் வந்து கொண்டிருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே தங்களது இயக்கம் குரல் கொடுத்தது. ஆனால் எங்களது கடவுள் மறுப்பு கொள்கையை மட்டுமே பேசுகின்றனர். எங்களுக்கு யாரும் விரோதி இல்லை. சமூக நீதிதான் முக்கியம். சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க வேண்டும். சாதி வெறி சுதந்திர நாட்டில் அனைத்து இடங்களிலும் ஊறிக் கிடக்கிறது. பெரியாரை தாண்டி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. நீட் தேர்வை ஒழிக்காமல் ஓயமாட்டோம். நீட் தேர்வு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது. நீட் தேர்வை மத்திய அரசு நடத்துவதற்கு உரிமை இல்லை. அது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது.நீட்டை ஒழிப்போம் என தமிழகத்தை ஆளும் அரசு தீர்மானம் போடும் நிலையில், அதனை மக்கள் மத்தியில் பிரச்சரமாக கொண்டு செல்ல தடை விதிக்கிறது. நீட் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் எங்களை பாராட்ட வேண்டாம், தொந்தரவு செய்யாமலாவது இருந்திருக்கலாம். நாங்கள் சமூக விரோதிகள் இல்லை. சமூகத்தை ஒன்றிணைப்பவர்கள். சனாதன கொடுமைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. அன்று பெரியாரை எதிர்த்தவர்கள், இன்று பெரியார் என்ற மாமருந்து உலகத்திற்கு தேவை என்பதை ஏற்றுக்கொள்கின்றனர் என பேசினார். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அதன் ஆபத்தை மக்களுக்கு எடுத்து கூறவும் , சமூக சமத்துவக் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில், வரும் 22-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 6 நகரங்களில் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி நடைபெறுகிறது எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தினர், திமுகவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
நீட் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது!
🕒 20 ஆக., 2026, 12:35 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

