கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், பொதுமக்களிடம் இருந்து தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்காமல் நீர்நிலையில் கொட்டிய சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக ஆர்வலர் ஒருவர் நகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து, நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் மற்றும் துப்புரவு ஆய்வாளர் சுரேந்தர் ஆகியோர் சம்பவத்தை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீர்நிலையில் குப்பைகளை கொட்டியதாக கூறப்படும் விடுதி பணியாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குப்பைகளை முறையாக வகைப்படுத்தி நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

