கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி–பல்லடம் சாலை, நந்தனார் காலனி, அமைதி நகர், பெரியார் நகர், சி.டி.சி மேடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி சார்பில் G. ராமநாதன் அளித்த மனுவில், பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு கடந்த 1954-ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொத்து வரி உள்ளிட்ட வரிகளையும், மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணங்களையும் முறையாக செலுத்தி வருவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் வசித்து வரும் பட்டா நிலங்களை ‘ஆக்கிரமிப்பு நிலங்கள்’ எனக் கூறி தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பல தலைமுறைகளாக வசித்து வரும் வீடுகள் அகற்றப்பட்டால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமான குடும்பங்கள் வசிப்பிடத்தை இழந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, நீண்ட காலமாக வசித்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, உரிய விசாரணை நடத்தி நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என தவெக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

