விருதுநகர் மாவட்டம், புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, தேரில் சாத்தப்பட்டுள்ள பழைய அலங்காரத் துணிகளை அகற்றிவிட்டு புதிய துணிகளைப் பயன்படுத்த வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையாகத் திகழும் கம்பீரமான ராஜகோபுரத்தைக் கொண்ட இத்திருக்கோவிலில், ஆண்டாள் அவதார திருநாளான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 12 நாட்கள் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் சிகர நிகழ்வான, தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தேர் திருவிழா வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்யவுள்ளனர்.
இதனை முன்னிட்டு தற்போது தேரை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேரில் பயன்படுத்தப்பட்டுள்ள அலங்காரத் துணிகள் பழமையாகவும், பொலிவிழந்தும் காணப்படுவதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், பழைய துணிகளை உடனடியாக அகற்றிவிட்டுப் புதிய வண்ணத் துணிகளால் தேரைச் சீரமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோவில் நிர்வாக அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, கோவில் செயல் அலுவலரிடம் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்துப் பேசிய கோவில் செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள், "தேர் அலங்காரத் துணிகளை முழுமையாகப் புதிதாக மாற்றுவதற்கு சுமார் ₹11.30 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை செலவாகும். இதற்கு முறையான டெண்டர் கோரப்பட வேண்டும். தேரோட்டத்திற்கு மிகக் குறைந்த நாட்களே இருப்பதால், தற்போது டெண்டர் நடைமுறைகளை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இல்லை. இருப்பினும், சாத்தியமான வழிகளில் அலங்காரத் துணிகளை மாற்றி அமைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று விளக்கமளித்தார்.
இப்போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா செய்தி குறிப்பு அளித்துள்ளார்.

