விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லைப் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த நில எல்லை சர்ச்சைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நில அளவீடு மேற்கொண்டு தீர்வு கண்டனர்.
திருச்சுழி அருகே உள்ள டி.கடம்பன்குளம் கிராமமும், அதனை ஒட்டிய சிவகங்கை மாவட்டத்தின் சின்ன கண்ணனூர் கிராமமும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் கருவேல மரங்களை வெட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்களது மாவட்ட எல்லைக்குள் மற்றொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மரங்களை வெட்டியதாக இரு தரப்பினரும் புகார் தெரிவித்ததால் பதற்றமான சூழல் உருவானது.
இதையடுத்து, எந்த பகுதி விருதுநகர் மாவட்டத்திற்கும், எந்த பகுதி சிவகங்கை மாவட்டத்திற்கும் உட்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், திருச்சுழி வட்டாட்சியர் கருப்பசாமி மற்றும் மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சம்பவ இடத்தில் நில அளவீட்டு பணியை மேற்கொண்டனர். பணிகள் நடைபெறும் போது சின்ன கண்ணனூர் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தியதையடுத்து நில அளவீடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இறுதியாக, இரு மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ எல்லை உறுதி செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன. இதன்மூலம் விருதுநகர்–சிவகங்கை மாவட்டங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வந்த நில எல்லை பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

