விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள 4 சாரைப் பாம்புகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக உயிருடன் பிடித்து, பின்னர் காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.
சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் பாம்புகள் பதுங்கியிருப்பதை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கவனித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பாம்புகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, சுமார் 6 அடி நீளமுள்ள 4 சாரைப் பாம்புகளையும் குழுவினர் பத்திரமாக உயிருடன் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்புகள் பாதுகாப்பான முறையில் காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விடுவிக்கப்பட்டன.
மருத்துவமனை வளாகத்திலேயே ஒரே நேரத்தில் 4 பாம்புகள் பிடிபட்ட சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

