தா.பழூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. போதுமான குடியிருப்பு வசதி இல்லாத நிலையில், தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
5 ஆண்டுகளாக தொடரும் கோரிக்கை
ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை நிலத்தை அளவீடு செய்து பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், பிரதான சாலையோரம் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் இளைஞர்கள் குளிப்பதால் பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அந்த தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலையில் மறியல்
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

