பொள்ளாச்சி–கோவை சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் 4 வாலிபர்கள் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி–கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற நிலையில், 4 பேர் ஒரே வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். இதில் ஒருவர் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்தபடி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ஆபத்தான முறையில் பயணம் செய்வது வாகனத்தில் சென்றவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி–கோவை சாலை தினமும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வரும் முக்கிய சாலையாக உள்ளது. இதுபோன்ற பரபரப்பான சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே, போக்குவரத்து விதிகளை மீறி இதுபோன்ற ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

