"3 வருஷமா வேலையே இல்லை!" – விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டம்! விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவஞானபுரம் ஊராட்சியைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த மூன்று ஆண்டுகளாக '125 நாள் வேலை உறுதித் திட்டத்தின்' கீழ் முறையாகப் பணி வழங்கப்படவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த வேலை உறுதித் திட்டத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக ஆண்டிற்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே தங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களாக ஒரு நாள் கூட வேலை தரவில்லை என்றும் போராட்டக் களத்தில் இருந்த பெண்கள் வேதனை தெரிவித்தனர். தங்களுக்கு உடனடியாக வேலை வழங்கக் கோரி, சிவஞானபுரம் ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை. அங்கிருந்த மற்ற அதிகாரிகள் பெண்களிடம் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், "வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்; இங்கிருந்து நகர மாட்டோம்" எனக் கூறி பெண்கள் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இன்னும் பத்து நாட்களில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் கலைந்து சென்றனர்.
செய்திகள்
"3 வருஷமா வேலையே இல்லை!" – விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டம்!
🕒 7 ஜூலை, 2026, 08:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
