நெல்லை மாவட்டம் திருப்பணிக்கரிசல்குளம் பகுதியில் குளக்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேட்டை போலீசார் திருப்பணிக்கரிசல்குளம்–துலுக்கர்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் திருப்பணிக்கரிசல்குளம் குளக்கரையில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 நாட்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவை பாதுகாப்பான முறையில் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுதொடர்பாக சுத்தமல்லியைச் சேர்ந்த மணிகண்டன் (42) மற்றும் திருப்பணிக்கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். வெடிபொருட்கள் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் என்பதும், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.
எனினும், பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

