தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைவாழ் மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தேனியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, தமிழக அரசு ஓரிரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் என்றும், மக்களை வெளியேற்ற அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 98 மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கடந்த ஒரு மாதமாக ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக கூறினார்.
“கடந்த ஆட்சியின் வாதக் குறைபாடே காரணம்”
ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் வன உரிமைச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடாததே தற்போதைய வெளியேற்றத் தீர்ப்புக்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக அரசு வலுவான சட்ட அறிக்கையுடன் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்து, மலைவாழ் மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
வனத்துறை நோட்டீஸ் குறித்து நடவடிக்கை
மலைவாழ் மக்களை வெளியேற்றுவதற்காக வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படும் தகவல் குறித்து தனது கவனத்திற்கு இதுவரை வரவில்லை என்றும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசி, வனத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் மக்களை தூண்டி அரசியல் செய்ய வேண்டாம் என்றும், வனத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்கள் விரைவில் மேகமலை–வருசநாடு பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் என்றும் ஜெகநாத் மிஸ்ரா கூறினார்.

