விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மீன் சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் தங்களுக்குப் பல லட்ச ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வியாபாரம் செய்த பழைய இடத்தையே தூய்மைப்படுத்தி மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், தங்களது கடைகள் மற்றும் வியாபாரம் செய்யும் பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் சிலர் முட்களையும், உடைந்த மதுபானப் பாட்டில்களையும் வீசிச் சென்றதாகக் கூறி, மீன் வியாபாரிகள் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
வியாபாரப் பகுதியில் முட்களும் கண்ணாடிச் சிதறல்களும் கிடந்ததால், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல முடியாத சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் அமைந்துள்ள நாற்கரச் சாலை மேம்பாலத்தின் கீழ் மீன் சந்தை இயங்க நகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது.
ஆனால், நகர்ப் பகுதிக்கு வெளியே அமைந்திருப்பதாலும், கனரக வாகனங்கள் தொடர்ச்சியாகச் சென்று வரும் மேம்பாலத்தின் கீழ் மார்க்கெட் அமைக்கப்பட்டிருப்பதாலும் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதிக்கு வாடிக்கையாளர்கள் வரத் தயங்குவதால் தங்களுக்குப் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மீன் வியாபாரி வைரக்கனி கூறுகையில், "சில அசம்பாவித சம்பவங்கள் காரணமாக மீன் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் உருவானது. இதனால் எங்களுக்குப் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பழைய இடத்தை உடனடியாகச் சுத்தம் செய்து, மீண்டும் அங்கேயே மீன் சந்தை இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

