தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் மற்றும் மழை என மாறுபட்ட காலநிலை நிலவி வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பு பரவி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,830 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

