சிவகாசியில் தொழிலதிபர் வீட்டில் 75 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், தப்பியோடிய மேலும் இருவரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஐயப்பன் காலனியைச் சேர்ந்தவர் அரவிந்த் ராம். அச்சகம் மற்றும் அங்காடி நடத்தி வரும் இவரது வீட்டிற்குள், கடந்த ஜூலை 5-ஆம் தேதி முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் சொகுசு காரில் வந்து அத்துமீறி நுழைந்தது. வீட்டில் இருந்த 75 பவுன் தங்க நகைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்த அக்கும்பல், கொள்ளையைத் தடுக்க முயன்ற அரவிந்த் ராம் மற்றும் அவரது மனைவியை வாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுவிட்டு காரில் தப்பியது.
இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) அனில்குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதற்கட்டமாக, கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உடந்தையாக இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மனோஜ்குமார் (24), பிரித்திவிராஜன் (28), சோமசுந்தரம் (24), பேச்சிமுத்து (21) மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்திய சொகுசு காரை ஓட்டி வந்த திருச்சியைச் சேர்ந்த பிரசாந்த் (30) ஆகிய 5 பேரை கடந்த ஜூலை 11-ஆம் தேதி போலீசார் கைது செய்து, சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில், கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷ் (29) மற்றும் ராஜகோபால் என்ற ராஜா (27) ஆகிய முக்கிய குற்றவாளிகள் இருவரைத் தற்போது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 24 சவரன் நகைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் இருவரைப் பிடிக்க போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

