சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, கால்நடைப் பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான ₹6 கோடி மதிப்பிலான அரசு நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நில புரோக்கர் மற்றும் தந்தை, மகன் உட்பட மூவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகிலுள்ள அனுப்பன்குளம் இலங்கை மறுவாழ்வு முகாம் பகுதியில், தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான 1 ஏக்கர் 80 சென்ட் நிலப்பரப்பில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் கோழிக்குஞ்சு பொரிப்பக மையம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. எனினும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இமையம் செயல்படாமல் கைவிடப்பட்ட நிலையில், அதன் நிர்வாகக் கட்டடங்கள் பாழடைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிலவுடைமை மேம்பாட்டுத் திட்டத்தின் (UDR) போது, இந்த அரசு நிலம், அருகிலிருந்த நிலத்தின் உரிமையாளரான அழகர்சாமி என்பவரது பெயருக்குத் தவறுதலாக மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அழகர்சாமி மறைந்த நிலையில், சுந்தர்ராஜபுரத்தில் வசிக்கும் அவரது மகன் பார்த்தசாரதி மற்றும் பேரன் விஜய் ஆகியோருக்கு இந்த நில மாற்றம் குறித்துத் தெரியாமல் இருந்துள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட பாரைப்பட்டியைச் சேர்ந்த நில புரோக்கர் செந்தில்குமார், விஜய்யை அணுகி, அவரது தாத்தா பெயரில் 1 ஏக்கர் 80 சென்ட் நிலத்திற்கான பட்டா இருப்பதாகவும், அதில் பார்த்தசாரதியின் பங்காக 61 சென்ட் நிலம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு அந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பிய விஜய், புரோக்கர் செந்தில்குமாரின் ஆலோசனையின்பேரில் அவர் தயாரித்துக் கொடுத்த போலி ஆவணங்களைக் கொண்டு, 61 சென்ட் நிலத்தைத் தனது தந்தை பார்த்தசாரதியிடமிருந்து தனது பெயருக்குத் தானப்பத்திரமாக சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டார். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ₹6 கோடி எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, அரசு நிலத்தைப் மனைப்பிரிவுகளாக (Plots) மாற்றத் திட்டமிட்ட செந்தில்குமார், அங்கிருந்த 36 பழமையான மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டிச் சாய்த்து, வாகனத்தில் கடத்த முயன்றுள்ளார். இதையறிந்த வருவாய்த்துறையினர் உடனடியாகப் பத்திரப்பதிவு மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்திய அதிகாரிகள், தவறான பட்டாவைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தைத் தனிநபர் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்ததையும், அனுமதியின்றி மரங்களை வெட்டியதையும் உறுதிசெய்தனர். இதனையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட நில புரோக்கர் செந்தில்குமார், பார்த்தசாரதி மற்றும் விஜய் ஆகிய மூவர் மீதும் சிவகாசி கிழக்குக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மரங்களை வெட்டப் பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

