விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சத்து மாத்திரைகள் மற்றும் டானிக் பாட்டில்கள் சாலையோரக் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியை அடுத்த வடபட்டி பகுதியில் உள்ள சாலையோரக் கழிவுகளில், அரசு மருத்துவமனைகள் மூலம் விநியோகிக்கப்படும் ஏராளமான சத்து மாத்திரைகளும், டானிக் பாட்டில்களும் வீசப்பட்டுக் கிடந்துள்ளன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
குப்பையில் வீசப்பட்டுள்ள இந்த மருந்துகள் காலாவதியானவையா அல்லது நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படாமல் அலட்சியமாக வீணடிக்கப்பட்டவையா என்பது குறித்து தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. மேலும், குப்பையில் கிடக்கும் இந்த மாத்திரைகளை அப்பகுதியில் மேயும் கால்நடைகள் உட்கொண்டால், அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு, மருந்துப் பொருட்களை குப்பையில் வீசியவர்கள் யார் என்பது குறித்தும், அதற்கான பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

