விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகரில் புளியம்பட்டி, காந்தி மைதானம், அன்பு நகர், காமராஜர் காலனி, டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ளிட்ட 10 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
இந்த சிலைகள் அனைத்தும் இன்று ஒரே நேரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. சிறுவர்களின் சிலம்பாட்டம் மற்றும் மேளதாளத்துடன் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை டிஎஸ்பி அலுவலகம் அருகே தொடங்கிய விநாயகர் ஊர்வலம் மதுரை சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்றது.
அப்போது மசூதி பின்புறம் உள்ள மதுரை சாலை வழியாக ஊர்வலம் சென்றபோது மேளம் வாசிக்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மேளம் வாசிக்க பயன்படுத்திய குச்சிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனால் ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
பின்னர் மசூதி பகுதியை கடந்து சென்றதும் மீண்டும் மேளம் வாசிக்க போலீசார் அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இந்து–முஸ்லிம் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம், இறுதியாக பந்தல்குடி சாலையில் உள்ள பெரிய கண்மாயை சென்றடைந்தது. ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் அங்கு நீரில் கரைக்கப்பட்டன.

