காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதி, தேசிய விடுமுறை தொடர்பான தொழிலாளர் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் துறை சார்பில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை நாளில் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்க வேண்டும். மேலும், பணியாளர்களை பணிக்கு அமர்த்துவது குறித்து 24 மணி நேரத்திற்கு முன்பாக தொழிலாளர் துறைக்கு உரிய படிவத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.சி.கௌரி ஜெனிஃபர் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் இணைந்து இரு மாவட்டங்களிலும் கூட்டாய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் 65 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 57 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் நிறுவனங்கள் மற்றும் 43 பீடி நிறுவனங்கள் என மொத்தம் 168 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 86 நிறுவனங்களில் தொழிலாளர் சட்ட விதிமுறைகளுக்கு முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

