பெரம்பலூர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 8-வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய அமைப்புகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, பணியில் உள்ள நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய நிர்ணயப் பலன்களை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழக நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் குறைக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.14 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதமும், 75 வயது நிறைவடைந்தவர்களுக்கு 15 சதவீதமும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில, மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

