தேனி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் குத்துவிளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைத்தறி பட்டு மற்றும் பல்வேறு ஆடை ரகங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, அவற்றின் விவரங்களை கேட்டறிந்தார். நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகள், பருத்தி சேலைகள், வேஷ்டிகள் மற்றும் பாரம்பரிய பருத்தி ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கைத்தறி பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் கைத்தறி ஆடைகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் கடந்த ஆண்டு தீபாவளி காலத்தில் ரூ.61 லட்சம் மதிப்பிலான விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.75.05 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

