நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் பஞ்சாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஆணைப்படி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தடையின்றி வேலை வழங்கக் கோரி, காங்கிரஸ் சக்தி அபியான் திட்ட மகளிர் அணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் சக்தி அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் சகுந்தலா ராமகிருஷ்ணன் தலைமையில், பெண்கள் அமைப்பினர் மற்றும் சக்தி அபியான் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்தனர்.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட விதிகளின்படி, 10 பணியாளர்கள் உள்ள இடத்தில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு கட்டாயம் பணி வழங்கப்பட வேண்டும்.
ஆனால், திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் தற்போது சுமார் 60 நபர்கள் பணியாற்றி வரும் நிலையிலும், ஒரே ஒரு மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே பணி வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
சுழற்சி முறையும் சம வாய்ப்பும் மறுக்கப்பட்டு, குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பணி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து செயலாளர் மற்றும் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் முறையான தீர்வு வழங்கப்படவில்லை.
அரசு வழிகாட்டுதல்களின்படி திருப்பணிகரிசல்குளம் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடையின்றி சுழற்சி முறையில் பணி வழங்கிடவும், விதிகளை மீறும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் சக்தி அபியான் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, மனு அளிக்க வந்த மாரிமுத்து என்ற மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக வீல் சேர் (சக்கர நாற்காலி) வழங்க கோரப்பட்டதை அடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் உடனடியாக வீல் சேர் வழங்க உத்தரவிட்டார்.

