விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கத்தி முனையில் கடத்திச் சென்றதாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான இசக்கிமுத்து (26), அதே பகுதியைச் சேர்ந்த கிருத்திகா மகேஸ்வரி (20) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் சென்னைக்கு சென்று நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் இருவரையும் விசாரித்து, இருவரும் திருமண வயதை கடந்திருந்ததால் சமரசம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சென்னையில் வசித்து வந்த இளம் தம்பதியினருக்கு பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சிவகாசி ரிசர்வ் லைன் திருப்பதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களை மிரட்டுவதாக ஏற்கனவே சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
வீட்டிற்குள் புகுந்து மனைவியை அழைத்துச் சென்றதாக புகார்
இந்நிலையில், கிருத்திகா மகேஸ்வரியின் தந்தை சசிக்குமார், தாய் மகாலட்சுமி, சகோதரர் சஞ்சீவ் மற்றும் உறவினர் ஸ்ரீகுமார் ஆகிய 4 பேரும் வீட்டில் இளம் தம்பதியினர் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்ததாக இசக்கிமுத்து புகாரில் தெரிவித்துள்ளார்.
அப்போது தனது முகத்தை துணியால் மூடி, கயிற்றால் கட்டிப்போட்டு, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும், தனது மனைவி கிருத்திகா மகேஸ்வரியை தாக்கி வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தனது செல்போன், திருமண ஆவணங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்.
தனது மனைவியை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அவர் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
4 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் 4 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், காணாமல் போனதாக கூறப்படும் இளம் பெண்ணை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

