சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து, மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் தலைமையில் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறவுள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள், வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கட்டமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
முன்னதாக, இரு மாவட்ட ஆட்சியர்களும் தாணிப்பாறை அடிவாரத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்குப் பணிகளைப் பிரித்து உத்தரவிட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அபினவ் குமார், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, தாணிப்பாறை அடிவாரம், வனத்துறை நுழைவு வாயில், தற்காலிகப் பேருந்து நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் இடங்கள், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வாகனங்கள் சென்று வருவதற்கான மாற்றுப் பாதைகள், கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்த வேண்டிய இடங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான திட்டமிடுதலுடன் செயல்படுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு டிஐஜி அறிவுறுத்தினார்.
அதேபோல், மதுரை மாவட்ட திட்ட இயக்குநர் சதீஸ் பாபு மற்றும் உதவி இயக்குநர் சுரேஷ் ஆகியோர் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பாதையில் ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்களுக்குத் தேவையான மருத்துவச் வசதிகள், தடையில்லா குடிநீர் விநியோகம் மற்றும் பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

