ஈரநிலங்களின் எல்லைகளை முறையாக வரையறுத்து பாதுகாப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், வனத்துறை சார்பில் மாவட்ட ஈரநிலங்கள் மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள ஈரநிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஈரநிலங்களின் எல்லைகளை முறையாக வரையறுக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகளை சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஈரநிலங்களை பாதுகாப்பது, அவற்றின் எல்லைகளை முறையாக வரையறுப்பது மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் அனைத்து தொடர்புடைய துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி க.ரா.மல்லிகா, மாவட்ட வன அலுவலர் திரு த.இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

