விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டியில் 1,700 பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ராஜபாளையத்தைச் சேர்ந்த 12 பெண்கள் கொண்ட சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான “உமன் வெல்னஸ் வாக்கத்தான்” நடைபெற்றது. “போதை இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான், 5 கிலோமீட்டர் மற்றும் 3 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் ராஜபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1,700 பெண்கள் பங்கேற்றனர். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கொடியசைத்து வாக்கத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர்.
காந்தி சிலையில் இருந்து தொடங்கிய வாக்கத்தான், ரயில்வே பீடர் சாலை, டி.பி. மில்ஸ் சாலை, சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், பி.ஏ.சி.ஆர். சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று ஜவகர் மைதானம் எதிரே நிறைவடைந்தது.
போட்டியின் இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பெண்களுக்கு கேடயம் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

