விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்த தவழும் மாற்றுத்திறனாளி தம்பதி குமார்- பேச்சியம்மாள். இந்த மாற்றுத்திறனாளி தம்பதியினர் சாட்சியாபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையோரக்கடை அமைத்து மருத்துவ குணம் கொண்ட முடவாட்டு கிழங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயுடன் அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மாதாமாதம் முறையாக கிடைப்பதில்லை என கவலை தெரிவிக்கும் தவழும் மாற்றுத்திறனாளி தம்பதியினர் மீதமாகும் கிழங்குகளை கூட தங்களால் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருவதால் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அமைச்சருக்கு கீர்த்தனா தங்களுக்கு பெட்டிக்கடை அமைத்து தர வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் போதிய வருவாய் இல்லாமல் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் தவிக்கும் தங்களுக்கு ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இலவச வீடு வழங்கி உதவ வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு தவழும் மாற்றுத்திறனாளி தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் எந்த உதவியும் தங்களுக்கு முறையாக கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவிக்கும் இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் கூட தங்களுக்கு வழங்கவில்லை எனவும் விலை கொடுத்து வாங்கியதாகவும் வேதனை தெரிவிக்கும் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் அமைச்சர் கீர்த்தனாவும் உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

