விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் பகுதி பெடல்தறி நெசவாளர்கள் சார்பில், தினசரி கூலியை ரூ.500 ஆக உயர்த்த வேண்டும், நெசவாளர்களிடம் தேங்கியுள்ள உபரி சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும், கடந்த 4 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்ததற்கான நிவாரணம் வழங்க வேண்டும், ஆண்டுதோறும் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும், புதிய ரக சேலைகளுக்கு உரிய கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி அரசரடி பேருந்து நிறுத்தம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நெசவாளர் சங்கத்தினருடன் திமுக, தேமுதிக, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

