விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ஐ.எம்.எஸ் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியை பள்ளியின் தலைவர் ஜாபர் அலி கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள் மறைந்த தலைவர்களின் வேடமணிந்து, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக நடந்து சென்றனர். போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி நிறைவடைந்ததை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு வட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் கூமாபட்டி காவல் ஆய்வாளர் சங்கர், ஆகியோர் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர். மேலும், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகங்களை மாணவர்கள் நினைவுகூர வேண்டும் என்றும், போதைப்பொருட்களை தவிர்த்து கல்வி மற்றும் நல்ல செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். தொடர்ந்து வட்டாட்சியர் சரஸ்வதி மற்றும் காவல் ஆய்வாளர் சங்கர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
🕒 15 ஆக., 2026, 09:19 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
