அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கட்டுமானப் பணியின்போது செப்டிக் டேங்கிற்குள் இறங்கி பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செந்துறையில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் சுப்பிரமணியன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். வீட்டின் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்கில் கான்கிரீட் பணிக்குப் பயன்படுத்தப்பட்ட பலகைகளை அகற்றும் பணி நேற்று (அக்.2) நடைபெற்றது.
இந்த பணியில் திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரம் கடாரம்கொண்டான் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (42), புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (60), அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (45) ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்கிற்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். செப்டிக் டேங்கிற்குள் ஒரே நேரத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

