விருதுநகர் மாவட்டம், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிப் பகுதிகளுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் செண்பகத்தோப்பு பேயனாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, நகரின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2007-ஆம் ஆண்டு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, நகராட்சியின் 22 வார்டுகளுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட தண்ணீருக்காகக் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை, நகராட்சி நிர்வாகம் நீண்ட காலமாக வழங்காமல் பாக்கி வைத்துள்ளது. இதனால் நகராட்சிக்குத் தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாகச் செண்பகத்தோப்பு மற்றும் தாமிரபரணி ஆகிய இரு குடிநீர் ஆதாரங்களையும் இணைத்தே வீடுகளுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இருப்பினும், கடந்த 20 நாட்களுக்கு மேலாக நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் சிவஞானபுரம் தெருவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் காலி குடங்களுடன் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தைச் தொடர்புகொண்டு உடனடியாக அப்பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். உடனடியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

