உலக இதய தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கால்வின் தனியார் மருத்துவமனை சார்பில் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.
வள்ளியூர் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் கொடியசைத்து மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். குறிப்பாக, வர்ஷா என்ற 3 வயது சிறுமி தனது தந்தையுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்றது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
ராமநாதபுரம் இளைஞருக்கு முதல் பரிசு
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 10 கிலோமீட்டர் பந்தய தூரத்தை முதலில் கடந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமர் முதலிடம் பிடித்தார்.
முதலிடம் பெற்ற அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
“உடற்பயிற்சி மூலம் இதய நோயைத் தடுக்கலாம்”
இதய நோய் நிபுணர் டாக்டர் கால்வின் கூறுகையில், உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்க அளவு இதய நோய்களால் ஏற்படுவதாக தெரிவித்தார்.
முறையான உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் இதய நோய் பாதிப்புகளைத் தடுக்க உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் தினமும் நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் டாக்டர் கால்வின் தெரிவித்தார்.

