கொட்டும் மழையிலும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபரை, உடனடியாக செயல்பட்டு மீட்ட தலைமைக் காவலரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் மூன் பிரிட்ஜ், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையாராயம்–ஈச்சம்பூண்டி சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர மரத்தில் ஒருவர் தொங்கிய நிலையில் இருப்பதை அவர் கவனித்ததாக கூறப்படுகிறது.
சந்தேகமடைந்த தலைமைக் காவலர் தனது இருசக்கர வாகனத்தை திருப்பி மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொட்டும் மழையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்தார்.
தாமதிக்காமல் அவரை தூக்கிப் பிடித்து கயிற்றை அவிழ்த்து கீழே இறக்கிய தலைமைக் காவலர், அந்த நபருக்கு மூச்சு இல்லாததை கவனித்து உடனடியாக முதலுதவி அளித்தார். இதையடுத்து அவருக்கு மீண்டும் மூச்சு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு சென்று உதவி கேட்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து மற்றொரு காவலரின் உதவியை பெற்றதுடன், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த நபர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மழை பெய்துகொண்டிருந்த நிலையிலும், தாமதிக்காமல் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் மூன் பிரிட்ஜின் துணிச்சல் மற்றும் துரிதமான செயல்பாடு பாராட்டப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும் காவல்துறைப் படைத்தலைவருமான டாக்டர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., தலைமைக் காவலர் மூன் பிரிட்ஜை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடமை உணர்வுடன் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

