விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் புதூர் கிராமத்தில், கடந்த 7 ஆண்டுகளாகப் போதிய வசதிகளின்றி சிறிய தற்காலிக அறையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இதனால் குழந்தைகளும் ஊழியர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட புதிய கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சுமியாபுரம் புதூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், கடந்த ஏழு ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழுவிற்குச் சொந்தமான ஒரு சிறிய அறையில் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த ஒற்றை அறையிலேயே சமையல் செய்வதும், குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதிய இடவசதியும் அடிப்படை வசதிகளும் இல்லாததால், அங்கன்வாடி ஊழியர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், லட்சுமியாபுரம் புதூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக மீதமுள்ள 10 சதவீதப் பணிகள் முடிக்கப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கும் இந்தப் புதிய கட்டிடம் தற்போது போதிய பராமரிப்பின்றிச் சேதமடைந்து வருகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, விடுபட்ட பணிகளை விரைந்து முடித்து புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

