திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 188 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.
ஆனால், மதியம் 3 மணி நிலவரப்படி 40 பேர் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்திலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பிரிட்டானியா, MRF, டாடா சோலார் பவர், விக்ரம் சோலார் பவர் உள்ளிட்ட 188-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தின. இதில் 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பணி ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய ஆட்சியர், 188 நிறுவனங்கள் பங்கேற்றும், 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டும் மதியம் 3 மணி வரை 40 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாக உள்ளது என்றார்.
மேலும், இன்றைய இளைஞர்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான ஆரம்பகட்ட ஊதியத்தை விரும்புவதில்லை என்றும், உள்ளூரிலேயே பணியாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதாக தெரிகிறது என்றும் கூறினார். தனது அனுபவத்தை பகிர்ந்த ஆட்சியர் ஆனந்த் மோகன், UPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கு முன்பாக தானும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றியதாக தெரிவித்தார்.
குறைந்த ஊதியத்தில் தொடங்கும் வேலைவாய்ப்பு என்பது வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளி மட்டுமே என்றும், அதனை பயன்படுத்திக் கொண்டு அனுபவத்தையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மாலை நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

