ஒரு காலத்தில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அதிக வரவேற்பு நிலவிய நிலையில், தற்போது கோர் இன்ஜினியரிங் எனப்படும் அடிப்படை பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் 2025–26 கல்வியாண்டு வளாக வேலைவாய்ப்பு (Campus Placement) தரவுகள், இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE), மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், புரொடக்ஷன் இன்ஜினியரிங், பிரிண்டிங் டெக்னாலஜி மற்றும் செராமிக் டெக்னாலஜி ஆகிய ஆறு முக்கிய பொறியியல் பிரிவுகளில் படித்த தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இப்பிரிவுகளில் ஆண்டு ஊதியமாக ரூ.4 லட்சம் முதல் ரூ.46 லட்சம் வரை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, செமிகண்டக்டர், மின்னணு உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் அதிகரித்துள்ள பணியாளர் தேவை ஆகியவை கோர் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை உயர்த்தியுள்ளதாக கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கோர் இன்ஜினியரிங் பாடத்திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதும் மாணவர்களின் வேலைவாய்ப்பை மேலும் அதிகரிக்க உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

