விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதற்கான தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் காவியா முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற உள்ள “விக்ஷித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் 2027” நிகழ்வை முன்னிட்டு, மை பாரத் (MY Bharat) தளம் மூலம் இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதன் முதற்கட்டமாக “விக்ஷித் பாரத் சேலஞ்ச் ட்ராக்” என்ற பெயரில் இணையதளம் வாயிலாக பொது அறிவு சார்ந்த வினாடி வினா போட்டி நடைபெறுகிறது. இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்.
வினாடி வினா போட்டியைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களில் கட்டுரை எழுதுதல், ஓவியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் இளைஞர்களின் அறிவுத்திறன் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் புதுமையான சிந்தனைகள் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், “பாரதத்திற்கான புதுமை வடிவமைப்பு” உள்ளிட்ட தலைப்புகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரித்து, “வளர்ந்த இந்தியா 2047” என்ற இலக்கை அடையும் நோக்கத்துடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் 30.09.2026 வரை மை பாரத் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவில் பங்கேற்று, 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் பயணத்தில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் காவியா முத்துலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

