விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, குழந்தைகள் உளவியல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அனைவரின் முக்கியப் பொறுப்பு எனக் குறிப்பிட்டார். பள்ளிகளில் மாணவர்கள் அச்சமின்றி கல்வி கற்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், கல்வி வளர்ச்சியுடன் மாணவர்களின் உடல், மன மற்றும் சமூக நலனிலும் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு தேவையான திறன்கள் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை தயக்கமின்றி ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் நம்பிக்கையான சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாணவர்களின் நடத்தை மாற்றங்கள், கல்வியில் ஆர்வம் குறைதல், பள்ளி வருகை குறைவு உள்ளிட்ட அறிகுறிகளை ஆசிரியர்கள் கவனமாக அணுக வேண்டும் என்றும், அவற்றை வெறும் ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்காமல் மாணவர்களின் குடும்ப மற்றும் உளவியல் பின்னணியை புரிந்துகொண்டு அன்புடனும் பொறுமையுடனும் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தேவையான நேரங்களில் பெற்றோர்கள் மற்றும் உளவியல் உள்ளிட்ட துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று மாணவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறிய மாவட்ட ஆட்சித்தலைவர், போதைப்பொருட்களால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் தவறான பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்க நேர்மறையான வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இப்பயிற்சியின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உளவியல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அறிவு மற்றும் திறன்கள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. பயிற்சியைப் பயன்படுத்தி பாதுகாப்பான, போதைப்பொருள் இல்லாத மற்றும் மாணவர்களின் மனநலத்தை மதிக்கும் பள்ளிச் சூழலை உருவாக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அரவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இல.மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

