ஒன்றிய அரசின் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், OBC, EBC மற்றும் DNT பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் PM YASASVI – Top Class Education in Schools for OBC, EBC & DNT Students என்ற கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, 2026-27ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (National Scholarship Portal) மூலம் பெறப்படுகின்றன. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பாக செயல்படும் பள்ளிகள் மற்றும் 2025-26ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளில், தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை
இந்தத் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,25,000 வரையும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், திட்டத்தில் 30 சதவீத இடங்கள் மாணவியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள்:
- OBC, EBC அல்லது DNT பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- 2025-26ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதியான பள்ளிகளில் பயின்று வர வேண்டும்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2025-26ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள், 2026-27ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தொடர்ந்து பயிலும் பட்சத்தில், தங்களது விண்ணப்பத்தை Renewal முறையில் புதுப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை ஆகஸ்ட் 31, 2026க்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் சமர்ப்பித்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15, 2026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க உள்ள 9 மற்றும் 11ஆம் வகுப்பு தகுதியான மாணவர்களுக்கான விண்ணப்ப தேதிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.
விண்ணப்பிக்கும் இணையதளம்
National Scholarship Portal – scholarship.gov.in
மேலும் திட்டம் தொடர்பான தகவல்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

